Sidebar

22
Sun, Dec
38 New Articles

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

காதல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா?

ரோஷன்

பதில் :

திருமணம் தான் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

5141حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنْ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்  என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது? என்று கேட்டார்கள். அவர், என்னிடம் எதுவுமில்லை என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு! என்று சொன்னார்கள். அவர், என்னிடம் ஏதுமில்லை என்று பதிலளித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா? என்று கேட்டார்கள். அவர், இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது என்று கூறினார். உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொன்னார்கள்.

நூல் : புகாரி 5141

எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும், அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ(21)30

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 30 : 21

எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

صحيح مسلم

3336 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ كِلاَهُمَا عَنْ سُفْيَانَ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ – حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ أَبِى مَعْبَدٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَخْطُبُ يَقُولُ « لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلاَّ وَمَعَهَا ذُو مَحْرَمٍ وَلاَ تُسَافِرِ الْمَرْأَةُ إِلاَّ مَعَ ذِى مَحْرَمٍ ». فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ امْرَأَتِى خَرَجَتْ حَاجَّةً وَإِنِّى اكْتُتِبْتُ فِى غَزْوَةِ كَذَا وَكَذَا. قَالَ « انْطَلِقْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ ».

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எந்த ஆணும் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

நூல் : முஸ்லிம்

தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.

தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்

தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

6612 حَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ أَوْ يُكَذِّبُهُ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன. கண் செய்யும் விபசாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6612

நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றன. இந்நேரங்களில் ஆணையும், பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைப்பிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

அதே போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

எனவே இந்தப் பிரச்சனைகளில் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும், அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா?  என்று பார்க்க வேண்டும்.

நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டாள் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும்.

வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம்.

இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.

இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account