திருத்திய தவறு மக்களுக்கு சேராவிட்டால் யார் பொறுப்பு?
PJ தனது விளக்கத்தில் தவறு செய்து பின்னர் அதனைத் திருத்தி எழுதியதாக வைத்து கொள்வோம். நான் ஒரு கேள்வி வைக்கிறேன். ஒருவரிடம் பிஜே தவறாக எழுதிய குர்ஆன் உள்ளது. திருத்தி எழுதியது அவருக்குத் தெரியவில்லை என்றால், அவர் அந்தத் தவறுகளுடன் தானே படிப்பார்? பின்னர் அந்தக் குர்ஆனை மாற்று மத சகோதரர்களுக்குக் கொடுக்கிறார் என்றால் அவரும் அதனை தவறாகத் தான் படிப்பார்?
பிஜே நான் தவறாக எழுதியதை திருத்திக் கொள்ளுங்கள் என்று அவர் வெப்சைடில் கொடுத்திருக்கிறார். நாம் அதனைத் திருத்தி பின்னர் அதை மாற்று மத சகோதரருக்குக் கொடுத்தால், இதில் என்ன திருத்தம் உள்ளது என்று கேட்பார். குர்ஆனில் திருத்தம் உள்ளதா? என்று கேட்பார் என்றால் அதற்கு நாம் என்ன பதில் கூறுவது?
இப்படி ஒரு கேள்வியை இணைய தளங்களில் சிலர் உலாவ விட்டுள்ளனர். ஆனால் பதில் சொல்வது எப்படி அறிவு சார்ந்து இருக்க வேண்டுமோ அது போல் கேள்வியும் இருக்க வேண்டும். நானும் கேள்வி கேட்டேன் என்பதற்காக எதையாவது உளறி வைக்கக் கூடாது.
இவர் கேட்பது பீஜே தொடர்பான விஷயம் அல்ல. பொதுவானது. மனிதனாகப் பிறந்த யாராலும் தவிர்க்க முடியாத பிரச்சனையாகும். மாமேதைகளாக இருந்தாலும் கூட அவர்களும்சந்தித்தே ஆக வேண்டிய பிரச்சனை. இதை பீஜேயின் பிரச்சனையாக பார்ப்பது முதலாவது அறியாமையாகும்.
பீ.ஜே விளக்கத்தில் தவறு இருந்தால் என்ன செய்வது என்று கவலைப்படும் இவர்கள் மற்றவர்களிடம் தவறு ஏற்பட்டால் இது போன்ற நிலை ஏற்படாது என்று எண்ணுகிறார்களா?
மனிதனின் சிந்தனையில் தவறு ஏற்பட்டால் அவருக்கு முன்னாள் இரண்டு வழிகள் தான் உள்ளன.
தவறு என்று தெரிந்தாலும் அதை மக்கள் மத்தியில் கூறாமல் மறைத்து விடுவது ஒரு வழி.
தவறை மக்களிடம் சொல்லி விடுவது இன்னொரு வழி.
இதில் மூன்றாவது வழி இல்லை.
தவறு என்று தெரிந்தாலும் அதை மக்கள் மத்தியில் கூறாமல் மறைத்து இருந்தால் இவர் கூறுவது போன்ற சிக்கல் வராது. ஆனால் அதை நாம் செய்ய முடியாது, மறுமையில் அதை விட சிக்கல் ஏற்பட்டு விடும்.
மக்களிடம் சொன்னால் இவர் கேட்ட நிலை அனைத்து அறிஞர்களுக்கும் ஏற்படும்.
இந்தக் கேள்வியைக் கேட்பவருக்கே ஒரு தவறு ஏற்படுகிறது. அதைப் பிறகு உணர்ந்து திருத்திக் கொள்கிறார். இவர் திருத்திக் கொண்டது அனைவருக்கும் தெரிய முடியாது.
நம்மிடம் கேட்ட அதே கேள்வியை அவரும் இப்போது சந்திக்கிறார். உலகத்தில் யாராக இருந்தாலும் சந்தித்தே தீர வேண்டிய ஒரு விஷயத்தை பீஜேக்கு மட்டும் உரியதாக நினைப்பதில் அறியாமை பளிச்சிடுகிறது.
அடுத்து இவரது கேள்வியில் இன்னொரு தவறும் உள்ளது.
பீஜே என்ற ஒரு மனிதனுக்கு மட்டும் தான் தவறு ஏற்படும்; வேறு யாருக்கும் எந்தத் தவறும் ஏற்படாது என்ற எண்ணம் இருந்தால் தான் இதை பீஜே சம்மந்தப்பட்டதாகக் கேட்க முடியும்.
மேலும் பீஜே வாழும் நவீன யுகத்தில் பீஜே ஒரு தவறைத் திருத்திக் கொண்டதைத் தெரிவித்தால் அதிகமான மக்களை அது சென்றடைந்து விடும். ஆனால் இமாம்கள் காலத்தில் இந்த நிலை இருக்கவில்லை. அவர்கள் அனைவருமே ஆயிரக்கணக்கான சட்டங்களில் முன்னர் கூறியதற்கு மாற்றமாகக் கூறியுள்ளனர். உடனடியாக மக்களைச் சென்றடையும் ஊடகங்கள் இல்லாத காலத்தில் அவர் மாற்றிக் கூறிய கருத்து பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்து இருக்காது.
இதற்கு இவர்கள் அளிக்கும் பதில் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னர் கூறியதைப் பின்னர் மாற்றி உள்ளனர். ஆனால் பல நபித்தோழர்களுக்கு மாற்றிய விபரம் தெரியாமல் முந்தைய முறைப்படியே நபித்தோழர்கள் நடந்துள்ளனர். இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்?
صحيح البخاري
790 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، يَقُولُ: صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي، فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ، ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ، فَنَهَانِي أَبِي، وَقَالَ: كُنَّا نَفْعَلُهُ، «فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ»
790 முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 790
நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் மாற்றிய விபரம் தெரியாமல் பழைய முறைப்படியே தொழுது மரணித்தவர்களின் நிலை என்ன?
இதற்கெல்லாம் என்ன பதிலோ அது தான் நமக்குரிய பதிலாகும்.
இதைற்கு சரியான விடை இதுதான்:
எந்த மனிதனையும் அல்லாஹ் சக்திக்கு மீறிப் பிடிக்க மாட்டான். தவறான மொழிபெயர்ப்பை வாசித்து ஒருவர் தவறாக விளங்கிக் கொண்டால் சரியான மொழி பெயர்ப்பை அறிய அவருக்கு வழி இல்லாவிட்டால் அவரை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.
அது போல் மொழிபெயர்த்தவர் தனது மொழி பெயர்ப்பில் வேண்டுமென்று தவறு செய்யவில்லை;, ஆய்வு செய்பவர் ஆய்வில் எந்தக் குறைவும் வைக்காமல் ஆய்வு செய்கிறார். அவற்றில் ஒன்றிரண்டு தவறாகி விடுகிறது. இதனால் அவர் தண்டிக்கப்பட மாட்டார்.
صحيح البخاري
7352 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ المُقْرِئُ المَكِّيُّ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ العَاصِ، عَنْ عَمْرِو بْنِ العَاصِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا حَكَمَ الحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ، وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ»
7352 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.
இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 7352
எனவே மொழி பெயர்த்தவரும் அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்ள மாட்டார்.
தவறான மொழிபெயர்ப்பைத் தவறு என அறியாமல் அதன் படி செயல்பட்டவரும் மாட்டிக் கொள்ள மாட்டார்.
அல்லாஹ்வுக்கு இல்லாத அக்கறை இவர்களுக்குத் தேவை இல்லை என்பது தான் இதற்கான பதிலாகும்.
29.04.2010. 16:14 PM
திருத்திய தவறு மக்களுக்கு சேராவிட்டால் யார் பொறுப்பு?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode