தண்ணீர் வியாபாரம்
தண்ணீர் அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.
காற்று எவ்வாறு அனைவருக்கும் பொதுவானதாக உள்ளதோ அது போல் தண்ணீரும் பொதுவானதாகும்.
நமக்குச் சொந்தமான நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீராக இருந்தாலும், நமக்குச் சொந்தமான இடத்தில் தோண்டப்பட்ட கிணறாக இருந்தாலும் நம் தேவைக்கு முன்னுரிமை கொடுக்கலாமே தவிர தேவைக்கு மேல் உபரியாக உள்ள தண்ணீரை மற்றவர்களுக்குத் தடுக்கக் கூடாது. விற்பனையும் செய்யக் கூடாது.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
மதீனாவில் ரூமா எனும் இடத்தில் யூதர் ஒருவருக்குச் சொந்தமான கிணறு இருந்தது. அந்த யூதர் அந்தக் கிணற்று நீரை விலைக்கு விற்று வந்தார். இதைக் கண்ட நபிகல் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை யாராவது விலைக்கு வாங்கி முஸ்லிம்களின் பொதுப் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்தார்கள். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் உஸ்மான் (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார்கள்.
صحيح البخاري
2778 - وَقَالَ عَبْدَانُ: أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ حُوصِرَ أَشْرَفَ عَلَيْهِمْ، وَقَالَ: أَنْشُدُكُمُ اللَّهَ، وَلاَ أَنْشُدُ إِلَّا أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الجَنَّةُ»؟ فَحَفَرْتُهَا، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ: «مَنْ جَهَّزَ جَيْشَ العُسْرَةِ فَلَهُ الجَنَّةُ»؟ فَجَهَّزْتُهُمْ، قَالَ: فَصَدَّقُوهُ بِمَا قَالَ
2778 அபூ அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்ட போது அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். யார் ரூமா' என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி(வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக் கான) படையை (பொருளுதவி செய்து) தயார்படுத்துகின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா? என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றுக் கொண்டனர்.
صحيح البخاري
2353 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يُمْنَعُ فَضْلُ المَاءِ لِيُمْنَعَ بِهِ الكَلَأُ»
2353 தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால் நடைகளைத்) தடுத்ததாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 2353, 2354, 6962
நமக்குச் சொந்தமான நிலத்தில் தண்ணீர் பாய்ந்த பின் வரண்ட நிலத்துக்கு தண்ணீர் செல்ல விடாமல் தடுக்கக் கூடாது. அப்படித் தடுத்தால் கால்நடைகளுக்கு புல் பூண்டுகள் கிடைக்காமல் தடுத்த குற்றமாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
கால்நடைகளுக்கான தண்ணீரைத் தடுக்கக் கூடாது என்றால் மனிதர்கள் குடிப்பதற்கும், பயிர் செய்வதற்கும் பயன்படும் தண்ணீரை மற்றவர்களுக்கு வழங்க மறுப்பது கடுமையான விஷயம் என்று அறிய முடிகிறது.
மேலும் தண்ணீர் விற்பனை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) நேரடியாகவும் தடுத்துள்ளார்கள்.
صحيح مسلم
34 - (1565) وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، أَخْبَرَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ فَضْلِ الْمَاءِ»
தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம்
தண்ணீரை வியாபாரம் செய்யக் கூடாது என்றால் இன்றைய சூழலில் இதில் பல கேள்விகள் எழுகின்றன.
லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகத்திற்கு விலை நிர்ணயித்தல், தண்ணீரின் நிறம் மற்றும் சுவையை மேம்படுத்தி கிருமிகளை அழித்துத் தயாரிக்கப்படும் மினரல் வாட்டர் விற்பனை செய்தல் போன்றவை தண்ணீரை விற்பனை செய்த குற்றத்தில் சேருமா? என்பது தான் அந்தக் கேள்விகள்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இது தண்ணீரை விலைக்கு விற்பது போல் தோன்றினாலும் உண்மையில் இது தண்ணீர் வியாபாரமாகாது.
ஏனெனில் லாரியில் சுமந்து செல்லுதல், அதில் முதலீடு செய்தல் போன்ற காரணங்களுக்காகவே கட்டணம் வாங்கப்படுகின்றது. அது போல் சாதாரண தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் தான் மினரல் வாட்டருக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. எனவே இது தண்ணீரை விற்ற குற்றத்தில் அடங்காது.
நம்மிடம் ஒரு கிணறு உள்ளது. அதில் நம் தேவைக்கு மேல் தண்ணீர் இருக்கின்றது. இதில் நாங்களும் இறைத்துக் கொள்கிறோம் என்று ஒருவர் கேட்கும் போது, அவரிடம் கட்டணம் கேட்டால் அது தண்ணீரை விற்பதில் அடங்கும்.
நம்மிடம் தண்ணீர் இறைத்துத் தருமாறு அவர் கேட்கும் போது, அதற்கு நாம் கட்டணம் கேட்டால் அது குற்றமாகாது. இறைத்துத் தருவதற்காகவே கட்டணம் கேட்கிறோம்.
இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இதில் குழப்பம் ஏற்படாது.
தண்ணீர் வியாபாரம் செய்யலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode