கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா?
திருக்குர்ஆன் வசனத்தின் படி கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்காது என்று நாம் எழுதி இருந்தோம்.
அந்த ஆக்கம் இதுதான்.
ஜாகிர் நாயக்கின் அறியாமை
முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் ரவி சங்கருடன் நடத்திய கலந்துரையாடலின் போது திருக்குர்ஆனுக்கு மாற்றமான கருத்தை இஸ்லாத்தின் கருத்து என்று கூறியுள்ளார்.
கருவறையில் உள்ள குழந்தை செவியுறுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது 76:2 வசனத்தை ஆதாரமாகக் காட்டி கருவறையில் குழந்தை செவிமடுக்கும் என்று அவர் கூறுகிறார்.
இது குறித்து ஜகிர் நாயக்கின் மொழி மாற்றம் செய்யப்பட்ட உரையைக் கேளுங்கள்.
إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا(2)إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا(3)
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அவனுக்கு நாம் நேர்வழி காட்டினோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான்.
திருக்குர்ஆன் 76:2,3
இந்த வசனங்கள் கருவரையில் குழந்தை செவிமடுக்கும் என்று கூறுவதாக ஜாகிர் நாயக் கூறுகிறார்.
விந்துத் துளியாக இருந்தவனை கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம் என்பது கருவறையில் இருக்கும் போது குழந்தைக்கு இந்த ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது பற்றி பேசவில்லை.
இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.
இவ்வசனத்தில் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம் என்று மட்டும் சொல்லப்படவில்லை. மனிதனுக்கு நேர்வழி காட்டினோம் என்றும் சொல்லப்படுகிறது. மனிதர்கள் நன்றி செலுத்துவோராக சிலரும் நன்றி கெட்டவராக சிலரும் உள்ளனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வசனம் கருவறையில் உள்ள குழந்தை பற்றி பேசவில்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது. மனிதனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவது அவன் பருவ வயதை அடையும் போதுதான். மனிதன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ ஆவதும் பருவ வயதை அடைந்த பின்பு தான். கருவறையில் இருக்கும் போது உள்ள நிலையை இவ்வசனம் பேசவில்லை என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
அற்பமான விந்துத்துளியாக இருந்த மனிதன் பிறந்த பின் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் ஆகிறான். சில காலம் கழித்து நேர்வழியை அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறான் என்று படிப்படியாக மனிதன் வளர்ச்சி அடைவதைத் தான் இவ்வசனம் பேசுகிறது.
கருவறையிலேயே நேர்வழியையும், கெட்ட வழியையும் குழந்தை தேர்வு செய்கிறது என்று ஒருவர் கூறுவது எவ்வளவு அறியாமையோ அது போல் தான் கருவறையில் குழந்தை செவிமடுக்கும் என்று கூறுவதும் அறியாமையாகும்.
இன்னும் சொல்லப் போனால் இதற்கு மாற்றமாக திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لا تَعْلَمُونَ شَيْئاً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ) (النحل:78)
நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.
திருக்குர்ஆன் 16:78
கருவில் இருந்து வெளிவரும் போது எதையும் அறியாத நிலையில் தான் குழந்தை வெளிவருகிறது என்ற வாசகம் ஜாகிர் நாயக்கின் கருத்தை அடியோடு நிராகரிக்கிறது.
அது மட்டுமின்றி அவர் மருத்துவர் என்ற அடிப்படையில் தாயின் கருவறையில் குழந்தையின் காது கேட்கும் என்பதற்கு விஞ்ஞான முத்திரை குத்துகிறார்.
குழந்தை கருவறையில் இருந்து கொண்டு வெளியில் உள்ளதைக் கேட்கும் என்பதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை.
கருவறை என்ற தடுப்பு வெளி உலகில் நடப்பதைக் கேட்க முடியாமல் தடுத்துவிடும் என்பது தான் விஞ்ஞான உண்மை.
குழந்தையைச் சுமந்துள்ள தாய், பாடல்களைக் கேட்டால் அதைக் குழந்தையும் கேட்கும் என்கிறார்.
இதற்கு எந்த அறிவியல் நிரூபணத்தையும் அவர் எடுத்துக் காட்டவில்லை. அப்படி எந்த நிரூபணமும் இல்லை
மேலும் கருவறையில் உள்ள குழந்தையைப் பாதுகாப்பதற்காக வெளியில் நடப்பவற்றால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மூன்று திரைகளைப் போட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?
திருக்குர்ஆன் 39:6
கருவில் உள்ள குழந்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கும் என்று இவர் கூறுவது குர்ஆனுக்கு எதிரான வாதமாகும்.
பெரிய மனிதன் கூட காற்றுப் புக முடியாத தடுப்புக்குள் இருந்தால் வெளியே நடப்பதைக் கேட்க முடியாது.
இந்த ஆக்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஜாகிர் நாயக்குக்கு அனுப்பி அவரது விளக்கத்தை யாரேனும் பெற்று அனுப்பினால் அதையும் நாம் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அஹ்மத் ஜகபர் என்ற சகோதரர் கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்கும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இருப்பதாக ஆங்கிலக் கட்டுரை ஒன்றை அனுப்பினார். அதைத் தமிழ்படுத்தி அனுப்புங்கள் என்று நாம் பதில் அனுப்பினோம்.
அதன் அடிப்படையில் அவர் கீழ்க்காணும் கட்டுரையை அனுப்பியுள்ளார். அந்தக் கட்டுரை இது தான்:
கருவிலுள்ள குழந்தை எதைக் கேட்கிறது?
(from the Bridge publications newsletter)
கருவிலுள்ள குழந்தைக்குக் கேட்கும் சக்தி உள்ளதா?
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எப்போதும் புதிய கண்டுபிடிப்புகளை அறிவிப்பதில் ஆர்வம் கொள்வர்.
அண்மையில் கருவிலிருக்கும் குழந்தையால் கேட்க முடியும்; தன் தாயின் குரலையும் சரியாக அடையாளம் காண முடியும் என்ற கண்டுபிடிப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
கருவிலுள்ள குழந்தையால் எதைக் கேட்க முடியும்; எப்படி துல்லியமாக ஓசையை வேறுபடுத்தி அறிய முடியும் என்பது குறித்து மருத்துவ உலகில் இன்னும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இவ்வேளையில் ஒரு கேள்வி எழுகிறது 20 ஆண்டுகளுக்கு முன்பே முழுமையாக ஆராயப்பட்டு பதியு செய்யப்பட்ட ஒரு கருத்தைப் பற்றி மருத்துவ ஆராய்சியாளர்கள் மீண்டும் ஏன் இலட்சகணக்கான டாலர்களைச் செலவிடுகிறார்கள் என்பதே அக்கேள்வி.
கருவிலிருக்கும் குழந்தையுடன் பெற்றோர்கள் உரையாட வேண்டுமா? கருவிலிருக்கும் குழந்தைக்காக தாயானவள் இசை கேட்க வேண்டுமா? என்ற விவாதம் தொடர்கிறது.
ஆம் எனில் அவர்கள் எந்த இசையைத் தேர்வது? மொசார்ட்டின் இசையா? அல்லது ராப் இசையா? எது கருவிலிருக்கும் குழந்தைக்கு நல்லது? அக்கறையுள்ள எந்தப் பெற்றோரும் கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிப்பது எது? அது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது? என்று அறியவே விரும்புவர்.
ஒரு கர்ப்பிணிப் பெண் எதிர்பாராமல் சந்திக்கும் விபத்து, அவளது கருவை எவ்வாறு பாதிக்கும்? கருவுற்ற பெண்ணின் குடும்பச் சன்டைகளுக்குக் கரு எவ்விதம் எதிர்வினை புரிகிறது? ஒரு கர்ப்பிணியின் இன்பமான அல்லது துன்பமான மனநிலை கருவிடம் எந்த வேறுபாட்டையாவது ஏற்படுதுகிறதா? கர்ப்பிணி மனைவியுடன் அவள் கணவன் உடல் உறவு கொள்ளலாமா? கருச்சிதைவு செய்து கொள்வது நிச்சயமாக நல்ல விசயம் இல்லை. பாலியல் ஒழுக்கம் குறைந்து வருகின்ற இக்காலத்தில் நாம் அறிந்திருப்பதை விட அதிகமாகவே கருச்சிதைவு நடைபெறுகிறது என்பது உண்மை. இப்படிக் கருச்சிதைவு செய்து கொள்ளும் அன்னையர் இந்தக் கசப்பான உண்மை பிறருக்கு தெரியக் கூடாது என்று தங்களுக்குள்ளேயே மறைத்து விடுகின்றனர்.
ஆனால் இவ்வகை கருச்சிதைவானது கருவின் மீது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? கருவானது தற்கால அறிவியல் கூறுவதை விடவும் பல்வகைத் திறன்கள் பெற்று இருப்பதாக நம்பப்படுகிறது. அப்படியானால் அன்னையின் கருச்சிதைவு முயற்சியையும் மீறி பிறக்கும் குழந்தையின் வாழ்வில் அது என்ன விளைவை ஏற்படுத்தும்?
கருவிலுள்ள குழந்தையால் கேட்க முடியும் என்ற கருத்து உண்மையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் கூறப் போனால் பழமையான யூத மத ஏடு ஒன்றில் கருவினால் சில வகை உணவின் வாசனையை உணரமுடியும். விரும்ப முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
Dianetics: The Modern science of Mental Health என்ற நூலாசிரியர் L. Ron Hubbard, கருவிலிருக்கும் குழந்தையைப் பற்றிய பண்புகள் குறித்த ஆய்வு முடிவுகளை விளக்குகிறார். (விரும்பி செய்கின்ற) கருச்சிதைவு, கருவுற்ற பெண்ணுடன் உடலுறவு, அதிக ஒலி, கர்ப்பிணியின் இருமல் தும்மல் ஆகியவை கருவிலுள்ள குழந்தையின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை, தான் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில் பதிவு செய்கிறார்.
மேலும் இவை குழந்தையின் பிற்கால வளர்ச்சியில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அப்பாதிப்பை நீக்கவும் குணப்படுத்தவும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறார்.
அண்மையில் ப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானிகள் கருவில் இருக்கும் குழந்தையின் காதில் எவ்வித ஒலிகள் வந்தடைகின்றன என்பது குறித்து கருவுற்ற பெண்களிடம் தொடர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
ஆய்வின் முடிவில் அவர்கள் கருவினால் கேட்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். இசையைப் பொறுத்த வரையில் கருவினால் வயலினைக் கேட்க முடியாது. ஆனால் டிரம் ஒலியைக் கேட்க முடியும் என அறிந்தனர்.
இது உண்மையானால் கருவினால் மொசார்ட் இசையை விட ராப் இசையைக் கேட்க முடியும் என் உணரலாம்
ஆனால் மற்ற ஆய்வுகள் கருவானது மோசர்ட்டின் இசைக்கு எதிர்வினை புரிகிறது எனக் கூறுகின்றனர். ஆகவே கருவினால் வயலின் இசையை உணர முடியும் எனத் தெரிகிறது
உண்மையில் ஒன்டரியோவைச் சேர்ந்த கியீன்ஸ் பல்கலைக்கழகம் தனது ஆய்வு முடிவில் கருவிலிருக்கின்ற குழந்தையினால் பிற பெண்களின் குரலிலிருந்து தன் தாயின் குரலைப் பிரித்தறிய முடியும் என்று காட்டிஉள்ளனர்.
ஒரு கருவினால் உண்மையில் எவ்வளவு கேட்க முடியும்? அதனால் சொற்களை அறிந்து அவற்றை நினைவில் வைக்க முடியுமா? ஆகியன நம்முன் உள்ள கேள்விகள். ப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவிற்கு கடற்படை மற்றும் The National institute of Health and March of Times ஆகியவை ஒரு மில்லியன் டாலர் வழங்கியது பணியாளர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் வகுப்பதற்காக இவ்வுதவி அளிக்கப்பட்டது. கர்ப்பினிப் பெண்கள் (பணியாளர்கள்) கேட்கின்ற ஒலி அளவிற்கு எல்லை வகுப்பதும் அதில் ஒன்று.
இது நல்லது தான். காரணங்களை ஹப்பர்ட் தன் நூலில் விளக்குகின்றார். 1940 -ல் அவர் செய்த ஆய்வில் தாயின் வயிற்றில் கருவாக இருந்த போது கேட்ட உரையாடல்களை பின்னால் நினைவு கூற முடியும் என்ற உண்மையைப் பதிவு செய்தார். இது நம்ப முடியாததாகத் தோன்றலாம். ஆனால் இது கருவின் பல வித பரினாமங்களை, திறன்களைச் சுட்டிக்காட்டுகின்றது.
1950-ல் ஹப்பர்ட் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்ட பிறகும் இன்னும் இது பற்றி உடல் நலத்துறை ஏன் ஆய்வு செய்ய வேண்டும்?
ஒரு தாயின் கேள்வி: கருவிலிருக்கும் என் குழந்தையால் கேட்க முடியுமா? இக்கேள்வியை இணையதளத்தில் கேட்க நினைத்தேன். அப்போது baby centre.co.uk என்ற முகவரியிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. கருவினுள் என் குழந்தை என் இதயத் துடிப்பை கேட்கிறது என்று அது கூறியது.
இப்போது நான் 18 வார கர்ப்பிணியாக இருக்கிறேன். இன்னும் சில வாரங்களில் கருவால் வெளிப்புற ஒலிகளையும் கேட்க முடியும். (20 ஆவது வாரமாக இருக்கலாம்) என்று நான் நம்புகிறேன்.
நன்றி : தமிழக்கம் திரு. ரவிசெல்வன் M.A(ENG)M.A.(TAMIL)M.Ed PGT (TAMIL) ATOMIC ENERGY HIGHER SECONDARY SCHOOL KALPAKAM.
பதில் :
கருவில் உள்ள குழந்தை கேட்கும் என்பதற்கு நீங்கள் எடுத்துக் காட்டிய செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை. அதில் அறிவியல் பூர்வமான காரணம் ஏதும் இல்லை.
கண்டது, கேட்டது அனைத்தையும் கலந்து கட்டி அறைகுறையாக எழுதிய கட்டுரையாகவே அது உள்ளது. நம்பப்படுகிறது.
மத நூலில் உள்ளது,
நம்ப முடியாததாக உள்ளது,
இது உண்மையானால்,
கருத்து வேறுபாடு உள்ளது
என்று ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இது அறிவியலுடன் கப்சா கலந்து கற்பனை செய்யப்பட்ட கட்டுரை என்பதை அம்பலப்படுத்துகிறது..
பொதுவாக காது கேட்பது என்பதற்கு அறிவியலில் விளக்கம் உள்ளது. அந்த விளக்கத்துக்கு எதிராக இக்கட்டுரை அமைந்துள்ளது.
காற்றில் ஏற்படுத்தப்படும் அதிர்வுகள் காதில் உள்ள டிரம்மில் படுவதால் தான் காது கேட்கிறது. நீங்கள் நல்ல காது கேட்கும் திறன் உள்ளவராக இருந்து காற்றுப் புக முடியாத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தால் உங்களால் வெளியில் உள்ள சப்தத்தைக் கேட்க முடியாது.
வெளியில் காற்றில் ஏற்படுத்தப்படும் அதிர்வுகள் தாயின் உடலுக்குள் புகுந்து அதிலும் பல்வேறு இருள்களுக்குள் உள்ள கர்ப்ப அறையைக் கடந்து குழந்தையின் காதை அடையும் என்பதற்கு நீங்கள் எடுத்துக் காட்டிய தகவலில் ஆதாரம் இல்லை.
மேலும் கருவறையைக் கடந்து அந்த அதிர்வு சென்றாலும் கேட்கும் திறன் குழந்தைக்கு அப்போது இருக்குமா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கருவிலேயே கேட்கும் திறன் இருந்தால் பிறந்த குழந்தைக்கு ஏன் அது உடனே இருப்பதில்லை. பல மாதங்கள் கடந்த பிறகு ஏன் அதற்கு காது கேட்கிறது?
இதற்லெல்லாம் பதில் சொல்லத் தக்கதாக இருப்பது தான் அறிவியல் நிரூபணமாகும்.
தாயின் கவலை, சந்தோஷம், அதிர்ச்சி போன்றவை குழந்தையைப் பாதிக்கும் என்பது உண்மை.
அதற்குக் காரணம் காது கேட்கிறது என்பது அல்ல.
மாறாக தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் கருவரை வரை மாற்றங்கள் ஏற்படும். அதைக் குழந்தை உணர முடியும் என்று தான் அறிவியல் கூறுகிறது.
தாய் தனக்கு விருப்பமான இசையைக் கேட்டு மகிழும் போது அதற்கேற்றவாறு சுரப்பிகள் செயல்படும், அதனால் குழந்தைக்கு தாயிடமிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்களிலும் மாற்றம் ஏற்படும் என்று தான் அறிவியல் கூறுகிறது.
காது கேட்கும் என்று கூறவில்லை.
மக்கள் பேசிக் கொள்வதையும், சில மதங்களின் நம்பிக்கையையும் கலந்து கட்டி எழுதப்பட்ட கட்டுரையைத் தான் நீங்கள் அனுப்பியுள்ளீர்கள்.
நான் கேட்ட கேள்விக்கு அறிவியல் பூர்வமான விளக்கத்துடன் அறிவியல் ஆய்வு முடிவை நீங்கள் அனுப்பவில்லை.
கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode