கேள்வி: குர்ஆனில் ஜோடிகளின் எண்ணிக்கை சமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா?
உதாரணமாக,
இரவு = பகல்,
ஆண் = பெண்,
முஃமின் = காஃபிர்,
சூரியன் = சந்திரன்
விளக்கவும்.
பதில்: இரவு பகல், ஆண் பெண், உள்ளிட்ட இன்னும் பல சொற்கள் குர்ஆனில் சம எண்ணிக்கையில் உள்ளன என்று ரசாது கலீபா என்ற வழிகேடனால் சொல்லப்பட்டது.
இஸ்லாத்துக்கு சிறப்பு சேர்ப்பதாக எண்ணிக் கொண்டு சிலர் அதைப் பரவலாக பரப்பியும் வந்தனர்.
ரஷாத் கலீஃபா என்பவனின் கூட்டத்தினரின் உளறல்களில் இதுவும் ஒன்று. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளன என்று அவன் உளறியது குறித்து நம்முடைய தமிழாக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன் நாம் நடத்தி வந்த ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தெளிவாக விளக்கியுள்ளோம். அதையே உங்களுக்குரிய பதிலாகத் தருகிறோம்.
திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்பது முற்றிலும் பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் இதுவரை நாம் நிரூபித்தோம்.
“மென்டல் 19′ எனும் ரஷாத் கலீபா 19 உடன் தனது உளறலை நிறுத்திக் கொள்ளவில்லை. குர்ஆனில் அனைத்துமே கணிதக் கட்டமைப்பில் தான் அமைக்கப்பட்டுள்ளன என்று தைரியமாகப் புளுகினான்.
“அவர் ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணிக்கையைக் கொண்டு மட்டுப்படுத்தியுள்ளார்”
(திருக்குர்ஆன் 72:28)
கணக்கிடுவதில் மேதைகளுக்கெல்லாம் மேதையான (அல்ஹஸீப்) அல்லாஹ்வின் குர்ஆனில் காணப்படும் மேற்காணும் வசனத்தின்படி குர்ஆனுக்கும் எண்ணிக்கைகளுக்கும் உள்ள தொடர்பையும் அவற்றின் அமைப்பில் உள்ள அற்புதங்களையும் காண்போம்.
குர்ஆனில்:-
- ஷஹர் – (மாதம்) எனும் வார்த்தை – 12 முறைகள் உள்ளன.
- யவ்ம் – (நாள்) எனும் வார்த்தை 365 முறைகள் உள்ளன.
- இய்யாம் – (நாட்கள்) எனும் வார்த்தை 30 முறைகள் உள்ளன.
- ஷைத்தான் மற்றும் மலக்கு (வானவர்) ஆகிய இரண்டும் சமமாக 88 முறைகள் உள்ளன.
5.துன்யா (இம்மை) மற்றும் ஆகிரா (மறுமை) ஆகிய இரண்டும் சமமாக 115முறைகள் உள்ளன.
- ஈமான் (நம்பிக்கை) மற்றும் குஃப்ர் (நிராகரிப்பு) ஆகிய இரண்டும் 25முறைகள் சமமாக உள்ளன.
7.குல் (சொல்வீராக) மற்றும் காலு (அவர்கள் சொன்னார்கள்) ஆகிய இரண்டும் 332 முறைகள் சமமாக உள்ளன.
- கிஸ்த் (நீதம்) மற்றும் ஜுல்ம் (அநீதம்) ஆகிய இரண்டும் 15 முறைகள் உள்ளன.
மாதங்கள் 12,
மாதத்தின் நாட்கள் 30,
வருடத்திற்கு 365 நாள்,
மேலும் நல்லவையும் தீயவையும் சமமான எண்ணிக்கையில் குர்ஆனில் அமையப் பெற்றிருப்பது தற்செயல் என்றா எண்ணுகிறீர்கள்? இவை அல்லாஹ் தன் வேதத்தை ஒரு அற்புதமான கணிதக் கட்டமைப்பில் அமைத்திருப்பதை தெளிவாக எடுத்துக் காட்டவில்லையா?
என்று குறிப்பிட்டுள்ளான்.
இவனது புளுகை உண்மையென நம்பி சில முஸ்லிம் பத்திரிகைகளும் கூட அவற்றை மறு பிரசுரம் செய்துள்ளன.
மலர் ஒன்றில் இவனது புளுகை, புளுகு என்பது தெரியாமல் பெரிய தத்துவமாக வெளியிட்டிருந்தனர்.
அந்தப் புளுகுகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
குர்ஆனில், மாதம் (ஷஹர்) என்ற சொல் 12 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
யவ்ம் (நாள்) எனும் சொல் 365 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
அய்யாம் நாட்கள் என்பது 30 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
பார்த்தீர்களா அதிசயத்தை! வருடத்திற்கு 12 மாதங்கள் என்பதால் அச்சொல் 12 தடவை அமைந்துள்ளது.
வருடத்துக்கு 365 நாள் உள்ளதால் நாள் என்பது 365 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாதத்துக்கு முப்பது நாட்கள் என்பதால் 30 தடவை நாட்கள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதெல்லாம் கணிதக் கட்டமைப்பில் குர்ஆன் அமைக்கப் பட்டுள்ளதற்குச் சான்றாகும் என்றெல்லாம் மென்டல் கூட்டம் கூறும் போதும் பிரசுரங்களில் எழுதும் போதும், அறியாத மக்கள் பிரமித்துப் போய் விடுவார்கள்.
ஆனால் இந்த எண்களில் இச்சொற்கள் இடம் பெறவில்லை எனும் போது இவர்கள் எந்த அளவு குர்ஆனுடன் விளையாடும் கீழ்மக்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாதம் என்பதைக் குறிக்கும் சொற்கள் மொத்தம் 21 தடவை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் விபரம் இதுதான்:
ஷஹ்ர் (மாதம்) என்ற சொல் தனியாக 4 தடவை (2:185, 34:12, 34:12, 97:3 ஆகிய வசனங்கள்)
அல் என்ற அலங்காரச் சொல்லுடன் சேர்த்து (அந்த மாதம்) 6 தடவை (2:185, 2:194, 2:194, 2:217, 5:2, 5:97ஆகிய வசனங்கள்
ஷஹ்ரைன் (இரு மாதங்கள்) என்பது 2 தடவை (4:92, 58:4 ஆகிய வசனங்கள்)
ஷஹ்ரன் (ஒரு மாதம்) என்பது 2 தடவை (9:36, 46,15 ஆகிய வசனங்கள்)
அஷ்ஹுர் (மாதங்கள்) 5 தடவை (2:197, 2:226, 2:234, 9:2, 65:4 ஆகிய வசனங்கள்)
அல் அஷ்ஹுர் (அந்த மாதங்கள்) 1 தடவை (9:5 ஆகிய வசனம்)
அஷ் ஷுஹூர் (அந்த மாதங்கள்) 1 தடவை (9:36 ஆகிய வசனம்)
ஆக மொத்தம் மாதத்தைக் குறிக்கும் சொற்கள் 21 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே வருடத்துக்கு 21 மாதங்கள் என்று கூற முடியுமா?
யவ்ம் – நாள் என்ற சொல் 365 தடவை பயன்படுத்தப்படவில்லை. மாறாக 378 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
வருடத்துக்கு 378 நாட்கள் தான் என்று மென்டல் கூட்டம் தனிக் காலண்டர் வெளியிடலாம்.
அய்யாம் என்பது 30 தடவை இடம் பெறவில்லை. மாறாக 27 தடவை தான் இடம் பெற்றுள்ளது.
இனி மேல் மாதத்துக்கு 27 நாட்கள் என்று மென்டல் காலண்டர் தயாரிக்கப்படலாம்.
ஷைத்தான் என்பது 88 தடவையும் மலக்கு என்பது 88 தடவையும் சமமாக இடம் பெற்றுள்ளது என்பது அடுத்த புளுகு.
இவ்வாறு புளுகி விட்டு பார்த்தீர்களா? இதைத் தற்செயல் என்றா நினைக்கிறீர்கள்? தீய சக்தியான ஷைத்தான் எனும் சொல் இடம் பெற்ற அதே அளவு தான் நல்ல சக்தியான வானவர் என்பதும் இடம் பெற்றிருப்பது குர்ஆன் கணிதக் கட்டமைப்பில் அமையப் பெற்றுள்ளதைக் காட்டவில்லையா என்று மென்டல் கூட்டம் பிரமிப்பை ஏற்படுத்துவார்கள்.
ஆனால் ஷைத்தான் என்பது 88 தடவையும், மலக் என்பது 68 தடவையும் தான் இடம் பெற்றுள்ளது. சமஎண்ணிக்கையில் இடம் பெறவில்லை. இதுவும் பச்சைப் புளுகே என்பதில் சந்தேகம் இல்லை.
அது போல் ஈமான் என்பது 25 தடவையும், குஃப்ர் என்பது 25 தடவையும் இடம் பெற்றுள்ளது. நேர்எதிரான இரண்டு தத்துவங்களும் சமமான எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளது குர்ஆன் கணிதக் கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கவில்லையா என்று மென்டல் கூட்டம் கேள்வி எழுப்புவார்கள்.
ஆனால் குர்ஆனில் ஈமான் என்பது 45 தடவையும், குஃப்ர் என்பது 36 தடவையும் தான் இடம் பெற்றுள்ளது. சமமான எண்ணிக்கையில் இடம் பெறவில்லை.
அது போல் கிஸ்த் (நீதி) என்பது 15 தடவையும் ளுல்ம் (அநீதி) என்பது 15 தடவையும் சமமாக இடம் பெற்று கணிதக் கட்டமைப்பில் குர்ஆன் அமைக்கப்பட்டுள்ளது என்று மென்டல் கூட்டம் புளுகும்.
ஆனால் உண்மையில் கிஸ்த் என்பது 15 தடவையும் ளுல்ம் என்பது 20 தடவையும் இடம் பெற்றுள்ளது. சமமாக இடம் பெறவில்லை.
அது போல் குல் என்பதும் காலூ என்பதும் 332 தடவை சமஅளவில் இடம் பெற்றுள்ளதாக இக்கூட்டம் புளுகும்.
ஆனால் உண்மையில் குல் என்பது 353 தடவையும் காலூ என்பது 332 தடவையும் இடம் பெற்றுள்ளது. சம எண்ணிக்கையில் அல்ல.
நிஃமத் (நற்பாக்கியம்) எனும் சொல் 75 இடங்களிலும், நன்றி செலுத்துதல் (ஷுக்ர்) எனும் சொல்லும் 75 இடங்களிலும் சம எண்ணிக்கையில் உள்ளதாகவும் புளுகியுள்ளார்கள்.
உண்மையில் நிஃமத் எனும் சொல் 71 தடவைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 71 தடவை தான் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஷுக்ர் எனும் சொல் 75 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் மேற்கண்ட இரண்டு சொற்களும் சம எண்ணிக்கையில் உள்ளது என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.
மவுத் (மரணம்) என்பது 145, வாழ்வு என்பதும் 145 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
ஆனால் மவுத் என்பது 144 தடவையும் ஹயாத் என்பது 167 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முஸீபத் எனும் சொல் 114 பொறுமை 114 இடங்களில் சம எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் புளுகியுள்ளனர்.
ஆனால் முஸீபத் எனும் சொல் 10 இடங்களிலும், பொறுமை என்பது 103 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முஹம்மது (ஸல்) அவர்களின் பெயர் 4 இடங்களிலும் சிராஜ் (விளக்கு) என்று -4 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.
இந்த சிராஜ் நான்கு எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அதில் ஒரு இடத்தில் மட்டுமே முஹம்மது நபியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சூரியனையும் நட்சத்திரத்தையும் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
சில சொற்கள் சம அளவில் இடம் பெற்றிருந்தால் கூட அதை வைத்து கணிதக் கட்டமைப்பில் அமைக்கப்பட்டதாகக் கூற முடியாது.
கீழ்க்கண்டவாறும் புளுகி உள்ளனர்.
நன்மைகள் ஏவும் வசனங்கள் -1000
தீமைகளைத் தடுக்கின்ற வசனங்கள்-1000
வரலாறுகளைக் கூறும் வசனங்கள்-1000
வாக்குறுதியாகக் கூறபட்டுள்ள வசனங்கள்-1000
உவமைகள் கூறும் வசனங்கள்-1000
அச்சுறுத்தி எச்சரிக்கும் வசனங்கள்-1000
ஆகுமானவற்றை விளக்கி கூறும் வசனங்கள்-250
தடுக்கப்பட்டவற்றைக் கூறும் வசனங்கள்-250
அல்லாஹ்வின் புகழ் கூறும் வசனங்கள்-100
இது வாய்க்கு வந்தவாறு அடித்து விட்ட பொய்யாகும். இந்த எண்ணிக்கைப்படி இவ்வசனங்களை கியாம நாள் வரை எடுத்துக் காட்டமுடியாது
குர்ஆனில் உள்ள அனைத்து சொற்களும் இப்படி அமைந்திருந்தால் தான் குர்ஆன் கணிதக் கட்டமைப்பில் உள்ளது என்பது நிரூபணமாகும்.
திருக்குர்ஆன் அதன் விழுமிய கொள்கைகளாலும் அற்புதமான தீர்வுகளாலும், உடைக்க முடியாத முன்னறிவிப்புகளாலும் தான் சிறந்து விளங்குகிறது. இது போன்ற உளறல்களால் அல்ல.
மேலும் கீழ்க்கண்டவாறும் உளறுகின்றனர.
யாஸீன் சூராவில் ‘அல்லாஹ்’ மூன்று முறையும், ‘ரஹ்மான்’ நான்கு முறையும் வந்துள்ளது. அதேபோன்று முல்க் சூராவிலும் அதே அளவில் அவ்விரு சொற்களும் இடம்பெற்றுள்ளன.
முஜாதலா அத்தியாயத்தில் ‘அல்லாஹ்’ 40 தடவை இடம்பெற்றுள்ளது. ஆனால் கமர், ரஹ்மான், வாகிஆ ஆகிய சூராக்களில் அல்லாஹ் ஒரு முறை கூட இடம்பெறவில்லை.
முஹம்மத் என்ற அத்தியாயத்தில் இரண்டு வசனங்களைத் தவிர எல்லா வசனமும் மீமில் முடிகின்றது.
இதையெல்லாம் எடுத்துக் காட்டி திருக்குர்ஆன் அற்புதம் என்று வாதிடுகின்றனர்.
இந்த வாதத்தில் ஏதேனும் பொருள் உள்ளதா என்று பாருங்கள். யாஸீன் சூராவிலும் முல்க் சூராவிலும் அல்லாஹ் என்ற சொல் மூன்று முறை வந்துள்ளதால் என்ன அற்புதம் நிகழ்ந்து விட்டது?
முஜாதலா சூராவில் 40 தடவை அல்லாஹ் என்ற சொல் உள்ளதாலோ, கமர், ரஹ்மான், வாகிஆ சூராவில் அல்லாஹ் என்ற வார்த்தை இல்லாததாலோ குர்ஆனுக்கு என்ன சிறப்பு கூடிவிட்டது என்று இவர்கள் கூற வருகின்றார்கள்?
முஹம்மத் என்ற அத்தியாயத்தில் இரண்டு வசனத்தைத் தவிர எல்லா வசனமும் மீமில் முடிகின்றது என்பதை எந்தவிதமான கணிதக் கட்டமைப்பு என்று நிறுவப் போகின்றார்களோ தெரியவில்லை. மீமில் முடியாத அந்த இரண்டு வசனங்களையும் நீக்கி விட வேண்டும் என்று சொல்லப் போகிறார்களா?
இது போன்ற அறிவீனமான வாதங்கள் மூலம் குர் ஆனுக்கு சிறப்பு சேர்க்க முடியாது
குர்ஆனில் ஜோடிகளின் எண்ணிக்கை சமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode