Sidebar

25
Thu, Apr
17 New Articles

நேர்மையில்லாத தங்க வியாபாரம்!

வியாபாரம் பொருளீட்டுதல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நேர்மையில்லாத தங்க வியாபாரம்!

பழைய தங்கத்துக்கு புதிய தங்கம் மாற்றுதல் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன?

நியாஸ் யூகே

பதில்:

தங்கத்தைக் கொடுத்து அதற்குப் பதிலாக வேறு தங்கத்தை மாற்றிக் கொள்வது தவறல்ல. தங்கத்தைக் கொடுத்து விட்டு சிறிது காலம் கழித்து அதற்குப் பதிலாக வேறு தங்கத்தைப் பெறுவதை மார்க்கம் தடைசெய்கின்றது.

2174 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ أَخْبَرَهُ أَنَّهُ الْتَمَسَ صَرْفًا بِمِائَةِ دِينَارٍ فَدَعَانِي طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ فَتَرَاوَضْنَا حَتَّى اصْطَرَفَ مِنِّي فَأَخَذَ الذَّهَبَ يُقَلِّبُهَا فِي يَدِهِ ثُمَّ قَالَ حَتَّى يَأْتِيَ خَازِنِي مِنْ الْغَابَةِ وَعُمَرُ يَسْمَعُ ذَلِكَ فَقَالَ وَاللَّهِ لَا تُفَارِقُهُ حَتَّى تَأْخُذَ مِنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الذَّهَبُ بِالذَّهَبِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ رواه البخاري

நான் நூறு தீனார்களை சில்லறையாக மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் என்னை அழைத்தார்கள். அவர்களிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு  ஃகாபாவிலிருந்து நமது கருவூலக் காப்பாளர் வரும் வரை சில்லறை தர முடியாது! என்றார்கள்.  இதை உமர் (ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது  அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது; ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர!  என்று கூறியுள்ளார்கள்  என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் அவ்ஸ் (ரலி)

நூல் : புகாரி 2174

பழைய தங்கத்துக்குப் புதிய தங்கம் மாற்றுதல் குறித்தும் தங்க வியாபாரம் குறித்தும் மேலும் சில செய்திகளை நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை வியாபாரமேயாகும்.

தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் நகைகளாகத் தயார் செய்வதற்கான கூலியாகும்.

ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.

ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு சேதாரம் என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது. நகை செய்யும் போதும், பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மெழுகு மூலம் ஒட்டி எடுத்து மீண்டும் வேறு நகைக்கு அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.

இரண்டாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்.

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும், பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும், கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஹராமாகும்.

ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல், முத்து, பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள்.

இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

எந்தக் கடையில் கல்லுக்கும் தங்கத்தின் விலையைக் கொடுத்து வாங்கினோமோ அந்தக் கடையில் அந்த நகையை நாம் ஓரிரு மாதங்களில் விற்றாலும் கல்லைக் கழித்து விட்டு தங்கத்துக்கு மட்டும் தான் பணம் தருவார்கள்.

அடுத்ததாக பழைய நகை வாங்கும் போது இரட்டை லாபம் கொள்ளை அடிக்கின்றனர்.

உதாரணமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை விலை என்றால் நம்மிடம் 900 ரூபாய் விலைக்கு வாங்குவார்கள். இதில் அவர்களுக்கு போதுமான லாபம் கிடைத்து விடுகிறது. ஆனால் பழைய நகை என்பதற்காக இன்னும் குறைத்து வாங்குவார்கள். தங்கத்தில் பழையது என்று எதுவும் இல்லை. உருக்கி நகை செய்தால் பழையதும் புதியதாகி விடும்.

அடுத்ததாக இன்னொரு மோசடியும் நடக்கிறது.

சொக்கத் தங்கம் எனப்படும் தனித் தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு அல்லது வெள்ளி கலந்தால் தான் நகை செய்ய முடியும்.

தங்கத்துடன் சேர்க்கப்படும் மற்ற உலோகங்களின் அளவைப் பொறுத்து ஆபரணத் தங்கம் வகைப்படுத்தப்படுகிறது.

சுத்தமான தங்கம் 24 காரட் என்று குறிப்பிடப்படும். இதில் 22 மடங்கு தங்கமும் இரு மடங்கு செம்பும் சேர்த்தால் அது 22 காரட் எனப்படும். 20 மடங்கு தங்கமும், நான்கு மடங்கு செம்பும் சேர்த்தால் அது 20 காரட் எனப்படும்.

தற்போது காரட் கணக்கில் குறிப்பிடாமல் கிராம் கணக்கில் அளவிடுகின்றனர். அதாவது 916 கிராம் தங்கமும், 84 கிராம் செம்பும் சேர்த்து நகை செய்தால் அது தான் 916 KDM எனப்படுகிறது. இது காரட் கணக்கில் 22 ஆகும்.

இதில் இரு வகையான மோசடி நடக்கிறது.

மேற்கண்ட கணக்குப்படி நகை விற்கும் நிறுவனங்கள் மிகவும் அரிதாக உள்ளது. 84 கிராமை விட செம்பை அதிகமாகவும், தங்கத்தை 916 கிராமை விட குறைவாகவும் சேர்த்து 916 என்று பொய்யாகக் குறிப்பிடுகின்றனர். இதை யாரும் சோதித்து வாங்குவதில்லை என்பதால் இந்த மோசடி பெருமளவில் நடக்கிறது.

ஒரு கடையில் வாங்கிய நகையை அதே கடையில் விற்கச் சென்றால் 916 கணக்குப்படி வாங்கிக் கொள்வார்கள். வேறு கடையில் விற்கச் சென்றால் இது 916 அல்ல; அதைவிடக் குறைவானது என்று சோதித்து விட்டுச் சொல்வார்கள். எல்லா கடைக்காரர்களூம் இப்படித்தான் செய்கின்றனர். இதில் இருந்து 916 என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர் என்பது உறுதியாகின்றது.

நாமறிந்த வரை சிங்கப்பூர், துபை ஆகிய நாடுகளில் இருந்து வாங்கி வரும் நகைகள் 916 என்று குறிப்பிட்டால் 916 ஆக இருக்கும். நமது நாட்டில் அப்படி இல்லை. இது ஒரு மோசடி.

மற்றொரு மோசடி இதுதான்:

916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.

அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி, சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான். ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால்வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.

இது தவிர இன்னும் பல மோசடிகளும் உள்ளன.

இப்படி தங்க நகை வியாபாரத்தில் எந்த நேர்மையும் இல்லை. இறையச்சமும் இல்லை. ஹராம் ஹலால் பற்றி கடுகளவும் கவலை இல்லை. தங்கநகை வியாபாரிகளாக உள்ள முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் குற்றவளிகளாக நிற்கக் கூடாது என்பதற்காகவும், அவர்களின் வருமானம் ஹராமாக ஆகி அதனால் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் தகுதியை அவர்கள் இழந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் இதை நாம் சொல்லியாக வேண்டியுள்ளது.

03.08.2011. 16:48 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account