Sidebar

31
Thu, Jul
49 New Articles

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

ஆடை அலங்காரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களுடைய முகத்தையும் இரு முன் கைகளையும் கரண்டைக்குக் கீழ் உள்ள கால் பகுதிகளையும் மறைக்காமல் இருக்கலாம். மற்ற பாகங்களை மறைக்க வேண்டும். இம்முறை ஹிஜாப் பர்தா என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது.

பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அணிந்தால் அவர்கள் பர்தாவைப் பேணியவர்களாகி விடுவர்.

ஆனால் இன்றைக்கு நடைமுறையில் இயல்பான ஆடைகளுக்கு மேல் கூடுதலாக நீண்ட வேறு ஒரு ஆடையை பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். இந்த கூடுதலான ஆடை தான் பர்தா என்றும் பலர் கருதுகின்றனர்.

இவ்வாறு ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் கூடுதலாக ஆடைகளை அணிந்து கொண்டால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. ஆனால் எல்லோரும் இவ்வாறு தான் அணிய வேண்டும் என்றோ இது தான் இஸ்லாமிய பர்தா முறை என்றோ கட்டாயச் சட்டமாக கூறுவது கூடாது.

ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பர்தாவிற்கு என பெண்கள் தனியே எந்த ஒரு ஆடையையும் வைத்துக் கொள்ளவில்லை. ஆடை வேறு பர்தா வேறு என்றில்லாமல் பர்தா சட்டத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் தங்களது ஆடை முறையை அமைத்துக் கொண்டார்கள்.

இதை பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

5825 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ أَخْبَرَنَا أَيُّوبُ عَنْ عِكْرِمَةَ أَنَّ رِفَاعَةَ طَلَّقَ امْرَأَتَهُ فَتَزَوَّجَهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ الْقُرَظِيُّ قَالَتْ عَائِشَةُ وَعَلَيْهَا خِمَارٌ أَخْضَرُ فَشَكَتْ إِلَيْهَا وَأَرَتْهَا خُضْرَةً بِجِلْدِهَا فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنِّسَاءُ يَنْصُرُ بَعْضُهُنَّ بَعْضًا قَالَتْ عَائِشَةُ مَا رَأَيْتُ مِثْلَ مَا يَلْقَى الْمُؤْمِنَاتُ لَجِلْدُهَا أَشَدُّ خُضْرَةً مِنْ ثَوْبِهَا قَالَ وَسَمِعَ أَنَّهَا قَدْ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ وَمَعَهُ ابْنَانِ لَهُ مِنْ غَيْرِهَا قَالَتْ وَاللَّهِ مَا لِي إِلَيْهِ مِنْ ذَنْبٍ إِلَّا أَنَّ مَا مَعَهُ لَيْسَ بِأَغْنَى عَنِّي مِنْ هَذِهِ وَأَخَذَتْ هُدْبَةً مِنْ ثَوْبِهَا فَقَالَ كَذَبَتْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَنْفُضُهَا نَفْضَ الْأَدِيمِ وَلَكِنَّهَا نَاشِزٌ تُرِيدُ رِفَاعَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنْ كَانَ ذَلِكِ لَمْ تَحِلِّي لَهُ أَوْ لَمْ تَصْلُحِي لَهُ حَتَّى يَذُوقَ مِنْ عُسَيْلَتِكِ قَالَ وَأَبْصَرَ مَعَهُ ابْنَيْنِ لَهُ فَقَالَ بَنُوكَ هَؤُلَاءِ قَالَ نَعَمْ قَالَ هَذَا الَّذِي تَزْعُمِينَ مَا تَزْعُمِينَ فَوَاللَّهِ لَهُمْ أَشْبَهُ بِهِ مِنْ الْغُرَابِ بِالْغُرَابِ رواه البخاري

இக்ரிமா கூறுகிறார் :

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முக்காடு அணிந்து கொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மைத் துன்புறுத்துவதாக) முறையிட்டார். தன் கணவர் தன்னை அடித்ததால் தனது மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.

-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி-

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! நான் (ஆயிஷா) இறை நம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரது (பச்சை நிற முக்காடுத்) துணியை விடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது'' என்று சொன்னேன். (இதற்கிடையில்)-அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் தம் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். ஆகவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.

அப்பெண்மணி, "(அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதை விட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை'' என்று கூறி, தமது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.

நூல் : புகாரி 5825

மேற்கண்ட சம்பவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்ட பெண் பச்சை நிறத்தில் முக்காடு அணிந்திருந்தார் என்றும் தனது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துக் காட்டினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் இயல்பான ஆடையைத் தான் தங்களது பர்தாவாக ஆக்கினார்கள் என்பதை இதன் மூலம் புரிகின்றோம்.

பொதுவாக ஆடைகளை அழகாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்கம் போதிக்கின்றது. இந்த அடிப்படையில் ஆண்கள் எவ்வாறு தங்களது ஆடைகளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள உரிமை பெற்றிருக்கின்றார்களோ அது போன்ற உரிமை பெண்களுக்கும் இருக்கின்றது.

பொதுவாக பெண்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறும் அதே வேளையில் வெளிப்படையான அலங்காரங்களை மட்டும் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கின்றது. 

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ (31)2

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

திருக்குர்ஆன் 24 : 31

மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்ற அலங்காரங்களை அந்நிய ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

பெண்களின் ஆடைகளில் வெளிப்படையான அலங்காரம் என்பது அவர்கள் அணியும் ஆடையைத் தான் குறிக்கும். தேவை கருதி இந்த அலங்காரத்தை மட்டும் வெளிப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கின்றது.

பிறரை ஈர்க்கும் வகையில் அமைந்திராத சாதாரண அலங்காரங்கள் உள்ள ஆடைகளைப் பெண்கள் அணிவதை மேற்கண்ட வசனம் அனுமதிக்கின்றது.

எந்த ஆடைகள் மிகவும் கவர்ச்சியாகவும் பிறர் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கின்றதோ அது போன்ற அலங்கார ஆடைகளை பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்பு அணிந்துவரக் கூடாது.

எனவே பெண்கள் அணியும் பர்தா என்பது பொதுவாக மக்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் வகையில் உள்ள அலங்காரங்களைக் கொண்டிருந்தால் அதை அணிவது தவறல்ல.

எந்த வகையான அலங்காரங்கள் மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்திக் காட்டக் கூடியதாகவும் பிறர் கவனத்தை தன்பால் ஈர்க்கக் கூடியதாகவும் அமைந்துள்ளதோ அது போன்ற அலங்காரங்கள் உள்ள பர்தாவை அணியக் கூடாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account