Sidebar

22
Sun, Dec
38 New Articles

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது

பித்அத்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது

தமது பிறந்த நாட்களையும், தமக்கு நெருக்கமானவர்களின் பிறந்த நாட்களையும், தமது தலைவர்களின் பிறந்த நாட்களையும் கொண்டாடி விழா எடுக்கும் வழக்கம் அதிகமான மக்களிடம் காணப்படுகிறது.

இதைப் பின்பற்றி முஸ்லிம்களும் இது போன்ற விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். தங்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை மீலாது எனும் பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

மற்றவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவது ஒரு விழாவாக மட்டும் அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக பிறந்த நாள் கொண்டாடுவது இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் ஒரு வணக்கமாக புனிதமான செயலாக கருதப்படுகிறது.

இஸ்லாத்தின் பெயரால் நாம் எதைச் செய்வதாக இருந்தாலும் நாம் விரும்பியதை எல்லாம் செய்து விட முடியாது. அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்கு அவ்வாறு வழிகாட்டி இருக்க வேண்டும். அவர்கள் காட்டாத எந்தக் காரியமும் இஸ்லாமாக இருக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது உள்ள அன்பால் இதைச் செய்கிறோம்; அவர்களை மதிப்பதற்காக அதைச் செய்கிறோம் என்று கூறி எந்த ஒன்றையும் இஸ்லாத்தில் நாம் சேர்க்க முடியாது.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

திருக்குர்ஆன் 5:3

நபிகள் நாயகத்துக்குப் பின் உண்டாக்கப்பட்ட அனைத்துமே பாவமாகும்; வழிகேடாகும் என்பதைப் பின் வரும் நபிமொழிகளில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

صحيح البخاري

2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 2697

صحيح مسلم

4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நமது கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம்

سنن النسائي

1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவாக்கப்பட்டவையாகும். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸாயி

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்டவை இஸ்லாம் அல்ல என்பது தான் அல்லாஹ்வால் மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டது என்பதன் பொருள்.

நல்லது என்ற பெயரில் நாம் செய்யும் காரிங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாமல் பின்னால் வந்தவர்களால் உருவாக்கப்பட்டு இருந்தால் அது வழிகேடாகும். அனாச்சாரமாகும். நரகில் தள்ளும் குற்றமாகும் என்பதை மேற்கண்ட நபி மொழிகள் தெளிவாகச் சொல்கின்றன.

நபிக்குத் தெரியாத நல்ல செயல்கள் உள்ளன; அவற்றை நாங்கள் கண்டுபிடித்து செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளதால் இது நபியின் மதிப்பதைக் குறைப்பதாக ஆகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீலாது விழா கொண்டாடியதில்லை. கொண்டாடச் சொல்லவும் இல்லை.

நம்மை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதிகம் மதித்த நபித்தோழர்கள் மீலாது கொண்டாடியதில்லை. நான்கு இமாம்கள் உள்ளிட்ட எந்த நல்லறிஞரும் கொண்டாடியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பிற மத மக்களிடமிருந்து காப்பியடித்து உருவாக்கப்பட்டது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டு அவர்கள் நபியாக நியமனம் செய்யப்பட்ட இரவாகிய லைலதுல் கத்ர் இரவுக்கு ஆயிரம் மாதங்களுக்கு நிகரான சிறப்பை வழங்கிய அல்லாஹ், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் பற்றி எந்தச் சிறப்பையும் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப்பின் முஸ்லிம்களுக்கு ஒரு ஆண்டுகளைக் கணக்கிடும் முறை தேவை என்று நபித்தோழர்கள் ஆய்வு செய்த போது நபிகளின் பிறந்த நாளில் இருந்து அந்த ஆண்டை ஆரம்பிக்கவில்லை. மாறாக இஸ்லாத்தின் எழுச்சிக்குக் காரணமான ஹிஜ்ரத் தான் அவர்களின் கவனத்துக்கு வந்தது.

பிறந்த நாளுக்கு எந்த முக்கியத்துவத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இதை விட முக்கியமானது என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் 12ல் இறந்தார்கள் என்பதற்குத் தான் ஆதாரம் உள்ளது. அந்த நாளில் பிறந்தார்கள் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் இல்லை.

திருக்குர்ஆனில் பல நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு இஸ்லாத்தில் முக்கியத்துவம் இருந்தால் ஒவ்வொரு நபியும் எப்போது பிறந்தார்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நபிமார்களின் வரலாற்றுத் துணுக்குகளை நமக்குச் சொல்லி இருக்கிறார்கள். அப்படிச் சொல்லும் போது எந்த ஒரு நபியின் பிறந்த நாள் பற்றியும் அவர்கள் சொல்லவில்லை.

இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். அவர்கள் அல்லாஹ்வின் கலீல் நண்பர் என்று அல்லாஹ்வால் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்பதை இந்த சமுதாயத்துக்குச் சொல்லித் தரவில்லை.

தனது பிறந்த நாள் பற்றி நபிகள் குறிப்பிட்ட போது ஆண்டுக்கு ஒரு தடவை வந்து போகும் நாள் என்று சொல்லாமல் வாராவாரம் வந்து போகும் திங்கட்கிழமை என்று குறிப்பிட்டார்கள். அந்த நாளில் நான் பிறந்ததாலும், அந்த நாளில் நான் நபியாக ஆக்கப்பட்டதாலும் நோன்பு வையுங்கள் என்று வழிகாட்டியுள்ளனர்.

صحيح مسلم

2807 – وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا مَهْدِىُّ بْنُ مَيْمُونٍ عَنْ غَيْلاَنَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِىِّ عَنْ أَبِى قَتَادَةَ الأَنْصَارِىِّ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- سُئِلَ عَنْ صَوْمِ الاِثْنَيْنِ فَقَالَ « فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ

திங்கள்கிழமை நோன்பு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகையில் “அதில்தான் நான் பிறந்தேன். அதிலே எனக்கு குர்ஆன் அருளப்பட்டது” என்கிறார்கள்.

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலீ)

நூல்: முஸ்லிம்

மீலாது கூட்டத்தினர் இதைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். வாராவாரம் நோன்பு வைப்பதன் மூலம் நபியின் மீதுள்ள அன்பைக் காட்ட மாட்டார்கள்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் பண்ண முடியாது, பசியோடு இருக்க வேண்டும் என்பதால் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு இந்த மீலாது பிடிக்காது.

இந்த மீலாதுக்கு ஆலிம்களுக்கு வருமானமும், புலவு சோறும் கிடைக்காது என்பதால் ஆலிம்களுக்கும் இந்த மீலாது விழா கசப்பாக உள்ளது.

மீலாது விழாக்களில் ஊர்வலம் என்ற பெயரில் போதையில் தள்ளாடுவது, கேடுகெட்ட வாசகங்களைப் பயன்படுத்தி கோசமிடுவது, தெருவாரியாக வசூல் செய்வது, நேர்ச்சை விநியோகிப்பது, இசைக்கருவிகளுடன் பாட்டுக் கச்சேரி நடத்துவது இன்னும் பற்பல அனாச்சாரங்களை ஊருக்கு ஊர் வித்தியாசமாக நடைமுறைப்படுத்துவோருக்கு வாராவாரம் மீலாத் கொண்டாடுவது பாரமாகவே இருக்கும்.

 “நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:31,32

நபியைப் பின்பற்றுவதில் தான் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியும் என்று உணர்ந்து நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account