விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா?
ஹதீஸ்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் இரு வகையில் உள்ளனர்.
ஒரு செய்தியைப் பதிவு செய்யும் போது அறிவிப்பவர்களை மட்டும் ஆய்வு செய்பவர்கள் ஒரு வகையினராவார்கள். நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறதா என்பதில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்துவார்கள்.
அந்தச் செய்தியின் கருத்து சரியானதா? குர்ஆனுக்கும், கண் முன்னே தெரியும் உண்மைக்கும் முரணில்லாமல் உள்ளதா? என்பதை ஆய்வு செய்பவர்கள் இன்னொரு வகையினராவர்.
சில அறிஞர்கள் இரண்டையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்வார்கள்.
ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று முதல் வகை அறிஞர்கள் பதிவு செய்தால் அவர்கள் அறிவிப்பாளர்களை மட்டும் கவனித்துத் தான் இப்படிக் கூறுகிறார்களே தவிர கருத்தைக் கவனித்து அல்ல.
புகாரியில் இடம்பெறும் ஒரு செய்தியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
3849 حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ ، حَدَّثَنَا هُشَيْمٌ ، عَنْ حُصَيْنٍ ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ ، قَالَ : رَأَيْتُ فِي الْجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَاقِرَدَةٌ قَدْ زَنَتْ فَرَجَمُوهَا، فَرَجَمْتُهَا مَعَهُمْ.
அறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்த ஒரு பெண் குரங்கை, குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.
அறிவிப்பவர் : அம்ர் பின் மைமூன்
நூல் : புகாரி 3849
இது நபிமொழி அல்ல. அறியாமைக் கால சம்பவம் என்று ஒருவர் சொன்னதை புகாரி பதிவு செய்துள்ளார்.
இதன் கருத்தை நம்பி புகாரி ஏற்றுக் கொண்டார் என்று சொல்ல முடியாது. மிகச் சாதாரண மனிதன் கூட இதன் கருத்தைச் சரிகாண மாட்டான் எனும் போது புகாரி இமாம் இந்தக் கருத்தை நிச்சயம் சரிகண்டு இருக்க மாட்டார்.
இதில் பல அபத்தங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றைக் காண்போம்.
மனிதர்களுக்கு மட்டும் தான் திருமணம், விபச்சாரம் என்ற இரண்டு வகையான பாலியல் தொடர்புகள் உள்ளன. மனிதர்களல்லாத மற்ற உயிரினங்களுக்கு விபச்சாரம் என்ற நிலை இல்லை. ஒரு ஆண் குரங்கு ஒரு பெண் குரங்குடன் உடலுறவு கொண்டால் மனைவியுடன் உறவு கொள்கிறதா? மனைவியல்லாத குரங்குடன் உடலுறவு கொள்கிறதா? என்று கற்பனை செய்ய முடியாது.
இந்தச் உண்மைக்கு மாற்றமான இச்செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உண்மை என நம்பி புகாரி அவர்கள் பதிவு செய்துள்ளதாகக் கருத முடியுமா?
விபச்சாரம் என்பது ஆணும், பெண்ணும் சேர்ந்து தான் செய்ய முடியும். இங்கே பெண் குரங்கைத் தண்டித்துள்ளார்கள்; ஆண் குரங்கைத் தண்டித்ததாக இந்தச் செய்தியில் இல்லை. இது அடுத்த அபத்தமாக உள்ளது.
குரங்குகள் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதில்லை. எனவே எல்லாக் குரங்குகளும் செய்ததைத் தான் அந்தக் குரங்கும் செய்துள்ளது. அப்படி இருக்கும் போது மற்ற குரங்குகள் எப்படி குறிப்பிட்ட அந்தக் குரங்கை குற்றம் சாட்டி தண்டித்து இருக்க முடியும்? இது அடுத்த அபத்தமாக உள்ளது.
ஒரு குரங்கின் செயல் மற்ற குரங்குகளுக்குப் பிடிக்காவிட்டால் மனிதர்கள் தண்டிப்பது போல் அவை தண்டிப்பதில்லை. மாறாக பாய்ந்து பிராண்டி தாக்கும். கூட்டமாகச் சேர்ந்து கொண்டு மனிதர்கள் செய்வது போல் கல்லெறி தண்டனை வழங்கி இருக்க முடியாது. இது மற்றொரு அபத்தமாகும்.
மேலும் சில குரங்குகள் சூழ்ந்து கொண்டு கல்லெறிந்ததைத் தான் மேற்படி அறிவிப்பாளர் பார்த்திருக்க முடியும். குரங்குகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி எதற்காகக் கல் எறிகிறீர்கள் என்று அவர் விசாரித்து இருக்க முடியாது. விபச்சாரத்துக்குத் தண்டனை வழங்குகிறோம் என்று அவை சொல்லி இருக்கவும் முடியாது. இது இன்னொரு அபத்தமாக உள்ளது.
எனவே குரங்குகளுக்குள் நடந்த தாக்குதலின் காரணத்தை மனிதன் அறிந்து கொள்ள முடியாது. எனவே இது முற்றிலும் பொய்யான கட்டுக் கதை என்பது பளிச்சென்று தெரிகிறது.
அப்படி இருந்தும் புகாரி இதை ஏன் தனது புகாரியில் பதிவு செய்தார்? இது தவறான செய்தி என்பது அவருக்குத் தெரியவில்லையா? என்று நாம் குழம்பத் தேவை இல்லை.
இச்செய்தியைத் தனக்குச் சொன்னவர் நம்பகமானவராக உள்ளார். அவருக்குச் சொன்னவரும் நம்பகமானவராக உள்ளார். அவருக்குச் சொன்னவரும் நம்பகமானவராக உள்ளார். எனவே இது ஆதாரப்பூர்வமானது என்பது மட்டுமே அவரது பார்வை. அதன் கருத்து பற்றி புகாரி இமாம் இந்நூலில் கவனம் செலுத்தவில்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை புகாரி இமாம் அவர்கள் எப்படி நம்பகமான ஹதீஸ்கள் என்று பதிவு செய்தார் என்று கேட்பவர்களுக்கு இதில் போதுமான விடை உள்ளது.
விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode