மழை பொழியும் வானமா? திருப்பித்தரும் வானமா?
திருக்குர் ஆன் 86.11 வசனத்துக்கு
திருப்பித்தரும் வானத்தின் மீது சத்தியமாக
என்று நாம் தமிழாக்கம் செய்துள்ளோம்.
இவ்வசனத்துக்கு இலங்கை அன்ஸாருஸ்ஸுன்னா மூலம் வெளியிடப்பட்ட தமிழாக்கத்தில்
(திரும்பத் திரும்ப) மழை பொழிதலை உடைய வானத்தின் மீது சத்தியமாக
என்று மொழி பெயர்த்துள்ளனர்,
இஸ்மாயீல் ஸலபி உள்ளிட்ட ஸலபுகள் இது தான் சரியான மொழி பெயர்ப்பு என்றும் பீஜே செய்தது தவறான மொழி பெயர்ப்பு என்றும் வாதிடுகின்றனர்,
இஸ்மாயீல் ஸலபியும், ஸலபு கூட்டத்தினரும் எந்த மொழிபெயர்ப்பை சரியானது என்று வாதிட்டு பரப்பி வருகிறார்களோ அதில் அவர்கள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட வசனத்திற்கு (திரும்பத் திரும்ப) மழை பொழிதலை உடைய வானத்தின் மீது சத்தியமாக என்று மொழிபெயர்ப்பு செய்தவர்கள் அந்த மொழி பெயர்ப்பில் இருந்து என்ன கருத்து கிடைக்குமோ அதைத் தான் சொல்ல வேண்டும்.
அதாவது வானத்தில் இருந்து அடிக்கடி மழை பொழிவதை இவ்வசனம் கூறுகிறது என்று தான் வாதிட வேண்டும்.
ஆனால் அன்ஸாருஸ்ஸுன்னா இயக்கம் நடத்தும் உண்மை உதயம் அக்டோபர் 2009 இதழில் மெய்சிலிர்க்க வைக்கும் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் ஏழு பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அக்கட்டுரையில் மொத்தம் 14 அறிவியல் உண்மைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் முதலாவதாக திருப்பித் தரும் வானம் என்ற தலைப்பில் சில அறிவியல் உண்மைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
வானத்தில் இருந்து அடிக்கடி மழை பொழிகிறது என்பது இந்தத் தமிழாக்கம் கூறும் செய்தி. இது ஒவ்வொரு மனிதனும் கண்டு அனுபவித்து வருகின்ற சாதாரண உண்மை தான். இதில் எந்த அறிவியல் முன்னறிவிப்பும் கிடையாது எந்த மெய் சிலிர்ப்பும் கிடையாது.
பீஜேயின் தமிழாக்கத்தில் "திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (இது தான் சரியான தமிழாக்கம்.)
இந்தத் தமிழாக்கத்தின் படிதான் இதில் அறிவியல் உண்மைகள் அடங்கியுள்ளதாக பீஜேயின் தமிழாக்கத்தில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
திருப்பித் தரும் வானம்இவ்வசனத்தில் (86:11) திருப்பித் தரும் வானம் என்று, வானத்திற்கு ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
வானம் எதைத் திருப்பித் தரும் என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.
கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக நமக்கு வானம் திருப்பித் தருகிறது. இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது.
வானம் திருப்பித் தருகின்ற தன்மை பெற்றிருக்கின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.
மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திரும்பவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.
இன்றைக்கு செயற்கைக் கோள் மூலம் ஒளி பரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன.
மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கிறான். இன்னும் நாம் சிந்திக்கும் போது ஏராளமான விஷயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.
திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்வார்களா?
இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது சொல்கிறார் என்றால், நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது; படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.
மேற்கண்ட பீஜேயின் விளக்கத்தைத் தான் இஸ்மாயீல் ஸலஃபி பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் இந்த விளக்கத்துக்கும் இக்பால் மதனி தமிழாக்கத்துக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா?
இக்பால் மதனியின் தமிழாக்கம் தான் சரி என்பது இஸ்மாயீல் ஸலஃபியின் நிலையாக இருந்தால் அதற்கு எந்த வகையிலும் ஒத்துப் போகாத பீஜேயின் தமிழாக்கத்தையும் அதிலிருந்து பெறப்படும் கருத்தையும் அவர் நிராகரிக்க வேண்டும்.
திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகள் என்று கட்டுரை எழுதும் போது பீஜேயின் தமிழாக்கத்தின் படி அதில் அடங்கியுள்ள அறிவியல் கருத்துக்களை எடுத்துக் காட்டுவதும், மற்ற நேரங்களில் பீஜேயின் தமிழாக்கம் தவறு என்று வாதிடுவதும் ஏன்?
இந்த இரட்டை நிலை ஏன்?
உங்கள் தமிழாக்கத்தின் படி என்ன கருத்து கிடைக்குமோ அதைத் தானே நீங்கள் வாதிட வேண்டும்.
இந்தக் கேள்வி கேட்டு பல ஆண்டுகள் ஓடி விட்டன. இன்னும் பதில் வரவில்லை.
மழை பொழியும் வானமா? திருப்பித்தரும் வானமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode