அய்யூப் நபி பெயரால் கட்டுக்கதை
(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)
41, 42. நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! "ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்'' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தபோது, "உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!'' (எனக் கூறினோம்).26
43. அவருக்கு அவரது குடும்பத்தினரையும், அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.
44. உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்!339 (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் நல்லடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.
திருக்குர்ஆன் 38;41-44
இவ்வசனங்கள் அய்யூப் நபியவர்கள் சோதனைக்குப் பின் அதிலிருந்து மீண்டதைக் கூறும் வசனங்களாகும்.
இவ்வசனங்கள் என்ன கூறுகின்றன என்பதை விளக்கப் புகுந்த திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் அனைவரும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளைக் கூறி அந்தக் கதைக்கேற்ப விளக்கம் தந்திருப்பதைக் காண்கிறோம்.
அய்யூப் நபியவர்கள் தமக்கு நோய் குணமானதும் தமது மனைவியை நூறு தடவை அடிப்பதாக சத்தியம் செய்தார்களாம். குணமடைந்தவுடன் நூறு இழைகள் கொண்ட ஒரு பிடி புல் கட்டால் மனைவியை அடிக்குமாறும் இதன் மூலம் செய்த சத்தியத்தை நிறைவேற்றுமாறும், இறைவன் இவ்வசனத்தில் கட்டளையிடுகிறான் என்பதே அவர்களின் விளக்கமாகும்.
மனைவியை நூறு தடவை அடிப்பதாக ஏன் சத்தியம் செய்தார் என்பதை விளக்கும் போது அதற்கும் பல கதைகளைக் கூறுகின்றனர். எந்தக் கதையை ஏற்பது என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளதே தவிர மனைவியை நூறு தடவை அடிப்பதாகச் சத்தியம் செய்தார் என்பதிலும், நூறு இழைகள் கொண்ட புல் கட்டால் அடிக்குமாறு இறைவன் கட்டளையிட்டான் என்பதிலும் விரிவுரையாளர்கள் ஒருமித்த முடிவில் தான் உள்ளனர்.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் தருவதில் தவறு செய்து விட்டார்கள் என்பதை,, சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்ள முடியும்.
"ஒரு கைப்பிடி புல் கட்டால் அடிப்பீராக'' என்று தான் திருக்குர்ஆன் கூறுகிறது. "மனைவியை அடிப்பீராக'' என்று திருக்குர்ஆனில் இல்லை. "உமது மனைவியை'' என்பது மொழி பெயர்ப்பாளர்கள் சுயமாக எழுதிக் கொண்டதாகும்.
உமது மனைவியை அடிப்பீராக என்று இவ்வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கம் தரவில்லை.
மூலத்தில் இல்லாத "உமது மனைவியை'' என்ற சொல்லை இடையில் நுழைப்பதனால் தான் கட்டுக்கதைகளைத் தேடியலையும் நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது.
ஒரு கைப்பிடி புல் கட்டால் அடிப்பீராக என்று தான் இவ்வசனத்தில் உள்ளது. அதில் நூறு இழைகள் இருக்க வேண்டும் என்று குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இல்லை.
இது கட்டுக்கதை என்பதைப் புரிந்து கொள்ள சிறிய அளவிலான இஸ்லாம் பற்றிய அறிவே போதுமானதாகும்.
அய்யூப் நபியவர்கள் தமது மனைவியை நூறு தடவை அடிப்பதாக சத்தியம் செய்தார்கள் என்பது உண்மையாக இருந்தால் இது போன்ற சத்தியங்களை நிறைவேற்றத் தேவையில்லை. அநியாயமான காரியங்களைச் செய்வதாக சத்தியம் செய்தால் அந்தச் சத்தியத்தை நிறைவேற்றக் கூடாது, மாறாக முறித்து விட வேண்டும்.
மனைவியை என்ன காரணத்துக்காக இருந்தாலும் நூறு தடவை அடிப்பதாக அய்யூப் நபியவர்கள் சத்தியம் செய்திருக்க முடியாது. அப்படியே கோபத்தில் சத்தியம் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கோபத்தில் நிதானமிழந்து செய்யும் சத்தியங்களுக்காக அல்லாஹ் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டான்.
இது கட்டுக் கதை என்பதற்கு முதல் காரணம் இது.
அய்யூப் நபியவர்கள் செய்த சத்தியம் சரியானது என்று வைத்துக் கொண்டால் அதை அப்படியே நிறைவேற்றுவது தான் அவர் மீதுள்ள கடமை. நூறு தடவை அடிப்பதாகச் சத்தியம் செய்துவிட்டு புல் கட்டால் ஒரு தடவை அடிப்பது சத்தியத்தை நிறைவேற்றுவதாக ஆகாது. புல் கட்டில் நூறு இழைகள் இருந்தாலும் ஆயிரம் இழைகள் இருந்தாலும் அதனால் அடிப்பது ஒரு தடவை அடித்ததாகத் தான் ஆகும். இது கட்டுக் கதை என்பது இதிலிருந்தும் உறுதியாகிறது.
இறைவன் வெறும் சொற்களைக் கவனிப்பவன் அல்ல. உள்ளத்தைத் தான் கவனிப்பான். நூறு தடவை மனைவியை அடிப்பதாக அய்யூப் நபி கூறியிருந்தால் அவ்வாறு கூறும் போது அவர் என்ன நினைத்துக் கூறினாரோ அதைத் தான் இறைவன் கவனிப்பான். இவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் அய்யூப் நபி சத்தியம் செய்யும் போது நூறு இழைகள் கொண்ட புல் கட்டால் மனைவியை அடிப்பதாக நினைத்திருக்க மாட்டார். எனவே இந்தக் கட்டுக்கதை இறைவனின் பண்புகளுக்கு எதிராகவும், அமைந்துள்ளது.
மேலும் இவ்வசனத்தில் அய்யூப் நபியைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது அவரைப் பொறுமையாளராகக் கண்டோம் என்று நற்சான்று வழங்குகிறான். பொறுமையாளர் என்று இறைவனே நற்சான்று வழங்கும் ஒருவர் மனைவியை நூறு தடவை அடிப்பதாக எப்படிச் சத்தியம் செய்வார்? பொறுமை குறைவாக இருக்கும் நம்மைப் போன்றவர்களே மனைவியை நூறு தடவை அடிப்பதாக சத்தியம் செய்ய மாட்டோம். பொறுமைக்கு முன்னுதாரணமாகக் கூறப்படும் அய்யூப் நபியவர்கள் எப்படி இவ்வாறு சத்தியம் செய்திருப்பார்கள்.
இந்தக் கட்டுக்கதை உண்மையாக இருந்தால் "அய்யூபை கோபக்காரராகக் கண்டோம்'' என்று தான் அல்லாஹ் கூறியிருப்பான். பொறுமையாளர் எனக் கூறியிருக்க மாட்டான். இதன் காரணமாகவும் இது கட்டுக்கதை என்பது உறுதியாகின்றது.
அப்படியானால் இந்த வசனத்தின் விளக்கம் தான் என்ன? என்று கேட்பவர்கள் விளக்கத்துக்காக எங்கேயும் அலையத் தேவையில்லை. இவ்வசனத்திலும் இதற்கு முந்தைய இரு வசனங்களிலும் சிந்தனையைச் செலுத்தினால் எந்தக் கட்டுக் கதையின் துணையுமின்றி சரியான விளக்கத்தைக் கண்டு கொள்ளலாம்.
அய்யூப் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டு சோதிக்கப்பட்டார்கள் இறைவன் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க நாடிய போது சில காரணங்களை ஏற்படுத்தி அதன் மூலமே நிவாரணம் தந்தான். "ஆகு' என்ற கட்டளை மூலம் ஆக்கவல்ல இறைவன், அவரது நோயைத் தீர்க்க குளிக்கும் தண்ணீரையும், குடிக்கும் தண்ணீரையும் தனது ஆற்றலால் உருவாக்கினான். அந்தத் தண்ணீரில் குளித்ததும், குடித்ததும் நோய் தீர்க்கும் காரணிகளாக இறைவனால் பயன்படுத்தப்பட்டன.
இதைக் கூறிவிட்டுத் தான் ஒரு பிடி புல்லை எடுத்து அதனால் அடிப்பீராக என்று இறைவன் கூறுகிறான். இதையும் முன்சொன்ன இரண்டு காரணங்களுடன் தான் தொடர்புபடுத்த வேண்டும். குளிக்கும் நீரும், குடிக்கும் நீரும் அவரது நோய் தீர்க்கும் மருந்தாக எவ்வாறு பயன்பட்டதோ அதைப் போல் புல்கட்டால் அவர் மேனியில் அடிப்பதும் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்பட்டது என்பதே இதன் கருத்தாக இருக்க வேண்டும்.
"உமது மனைவியை'' என்ற சொற்றொடரும், "நூறு இழைகள் கொண்ட'' என்ற சொற்றொடரும் மொழிபெயர்ப்பினர்களும், விரிவுரையாளர்களும் இடையில் நுழைத்தவை. எனவே அதை நீக்கிவிட்டு இவ்வசனத்தைக் கவனித்தால் இப்படி விளங்குவதற்குத்தான் இவ்வசனம் இடம் தருகிறது.
ஒரு பிடி புல்கட்டால் (உம்மீது) அடிப்பீராக என்ற பொருள் தான் இறைவனின் பண்புக்கு ஏற்றதாகவும், பொறுமைக்கு முன்னுதாரணமான அய்யூப் நபியின் தகுதிக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது.
இவ்வசனத்தில் "சத்தியத்தை முறிக்காதீர்'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லின் காரணமாகவே அய்யூப் நபி மனைவியை அடிப்பதாக சத்தியம் செய்தார் என்று கதை காட்டினார்கள்.
எவ்விதக் கதையும் கட்டாமலேயே இந்தச் சொல்லின் பொருளையும் புரிந்து கொள்ளலாம்.
தமக்கு நோய் நிவாரணம் கிடைத்தால் இறைவனுக்காக ஏதோ ஒரு வணக்கத்தையோ, தர்மத்தையோ, செய்வதாக சத்தியமோ, நேர்ச்சையோ செய்திருக்கலாம். மனிதர்கள் நோய்வாய்ப்படும் போது, இவ்வாறு நினைப்பது வழக்கமான ஒன்றுதான். நோய் நீங்கினால் மனைவியை அடித்து சித்திரவதை செய்வேன என்று நினைப்பது வழக்கத்தில் இல்லாதது. எனவே, தனக்காக அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுமாறு கட்டளையிடுகிறான். நோய் குணமாகி விட்டதால் அதை நிறைவேற்றுமாறு இறைவன் நினைவுபடுத்துகிறான் என்று புரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.
இது கட்டுக்கதை என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பான ஒரு நிகழ்ச்சியும் சான்றாக வுள்ளது.
அஷ்அரீ கோத்திரத்தைச் சேர்ந்த நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று பயணம் செய்ய வாகனம் (ஒட்டகம்) கேட்டோம். அவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் கேட்டோம். அவர்கள் மறுத்தார்கள். மேலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களுக்கு வாகனம் தர மாட்டேன் என்றும் கூறினார்கள். சற்று நேரத்தில் (ஜகாத் நிதிக்காக) சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. எங்களுக்கு ஐந்து ஒட்டகங்களைத் தருமாறு கட்டளை பிறப்பித்தார்கள். அதைப் பெற்றுக் கொண்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரமாட்டேன் என்று சத்தியம் செய்து, அதை மறந்துவிட்டு நமக்கு ஒட்டகத்தைத் தந்து விட்டார்கள். நபிகள் நாயகத்தை ஏமாற்றினால் நாம் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்று முடிவு செய்தோம். நபிகள் நாயகத்திடம் சென்று "எங்களுக்குத் தரமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு அதை மீறி விட்டீர்களே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்'' ஆம்! ஆயினும் நான் ஏதேனும் சத்தியம் செய்து அதை விடச் சிறந்ததைக் கண்டால் அந்தச் சிறந்ததைச் செய்து விடுவேன் எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரி 3133, 4385, 5518, 6721 7555, 6623, 6649, 6718
அய்யூப் நபியவர்கள் மனைவியை நூறு தடவை அடிப்பதாகச் சத்தியம் செய்திருந்தாலும் அவர்கள் அதை முறிப்பது தான் சிறந்ததே தவிர அதை எந்தத் தந்திரம் செய்தாவது நிறைவேற்றுவது நபியின் பண்பாக இருக்க முடியாது என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
அய்யூப் நபி பெயரால் கட்டுக்கதை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode