தொழுகையில் கவனம் சிதறினால்..?
தொழுகையில் (நம்மையறியாமல்) ஏற்படும் உலக சிந்தனைகளால் தொழுகைக்குப் பாதிப்பு உண்டா? தொழுகையில் கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா?
எஸ். அப்துல் ரஷீது, கொளச்சல்
صحيح البخاري
608 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ، وَلَهُ ضُرَاطٌ، حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قَضَى النِّدَاءَ أَقْبَلَ، حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قَضَى التَّثْوِيبَ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ المَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ لاَ يَدْرِي كَمْ صَلَّى "
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்பு கொடுக்கப்படும் போது பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்று பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, "இதை நீ நினைத்துப் பார், அதை நீ நினைத்துப் பார்' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 608
தொழுகையில் உலக எண்ணங்களை ஏற்படுத்துவது ஷைத்தானின் செயல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இதே செய்தி புகாரியில் 1231வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட இதே செய்தியுடன், "உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்துக்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியாவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தா செய்து கொள்ளட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
உலக எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை முறிந்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல், ரக்அத்தில் மறதி ஏற்பட்டால் ஸஜ்தா செய்து கொள்ளுமாறு கூறுகின்றார்கள். இதிலிருந்து தொழுகையில் உலக எண்ணங்கள் ஏற்படுவதால் தொழுகை முறியாது என்பதை அறியலாம். அதே சமயம் இயன்ற வரை தொழுகையில் கவனம் சிதறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.
திருக்குர்ஆன் 23:1,2
தொழுகையில் ஓதப்படும் வசனங்கள் மற்றும் திக்ருகளின் பொருளை உணர்ந்து தொழும் போது, இது போன்ற எண்ணங்கள் ஏற்படுவதை ஓரளவு தடுக்க முடியும்.
தொழுகையில் கவனம் சிதறினால்..?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode