திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?
என்னுடைய இந்து நண்பர் திருக்குர்ஆன் தமிழாக்கம் படித்து வருகிறார். அவர் அத்தியாயம் 24:13 படித்து விட்டு ஆயிஷாவைக் குற்றம் கூறியவர்களைப் பார்த்து இறைவன் நான்கு சாட்சிகள் கேட்கிறான். ஆனால் நான் பல முஸ்லிம் திருமணங்களில் பெண் வீட்டார் ஒரு சாட்சி, மாப்பிள்ளை வீட்டார் ஒரு சாட்சி ஆக இரண்டு சாட்சிகளுடன் திருமணம் முடிக்கிறார்களே இது கூடுமா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும்.
-எம். திவான் மைதீன், பெரியகுளம்
பதில் :
இஸ்லாமியச் சட்டப்படி கொடுக்கல் – வாங்கல், இன்ன பிற உடன்படிக்கைகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். இதைத் திருக்குர்ஆன் 2:282, 5:106 ஆகிய வசனங்களில் காணலாம். திருமணம் என்பதும் ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகளே அதற்குப் போதுமானது தான்.
ஆனால் ஒரு பெண்ணுடைய கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்துவது சாதாரண ஒப்பந்தம் போன்றது அல்ல. அவதூறு சுமத்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும். விபச்சாரம் நிரூபிக்கப்பட்டால் அளிக்கும் தண்டனை மிகவும் கடுமையானது. எனவே இரண்டு நபர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் இவ்வளவு கடுமையான தண்டனை வழங்க முடியாது.
எனவே தான் பெண்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்துவோர் குறைந்த பட்சம் நான்கு சாட்சிகள் மூலம் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்க வேண்டும். ஆணுக்கு எதிராக விபச்சாரக் குற்றம் சுமத்தினாலும் நான்கு சாட்சிகள் நேரடியாகப் பார்த்ததாகக் கூற வேண்டும் என்று இஸ்லாம் கடுமை காட்டுகிறது.
அது மட்டுமின்றி நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் இது பற்றி யாரேனும் பேசினால் அவ்வாறு பேசியவர்களுக்கு எண்பது கசையடி வழங்க வேண்டும் என்றும் நீங்கள் சுட்டிக் காட்டும் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒரு பெண் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதை ஒருவரோ, இருவரோ கண்டால் கூட அதைப் பரப்பத் தடை விதிக்கப்படுகிறது. நான்கு பேரும் நேரடியான சாட்சிகளாக இருக்க வேண்டும்.
இதில் கணவனுக்கு மட்டுமே இஸ்லாம் விதிவிலக்கு அளிக்கிறது. தன் மனைவியைத் தகாத நிலையில் பார்க்கும் கணவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டியதில்லை. ஏனெனில் அதன் பின்னர் அவன் அவளுடன் வாழத் தயங்குவான். எனவே பிரிந்து விட அவன் விரும்பினால் நான்கு தடவை சத்தியம் செய்து பிரிந்து விட வேண்டும்.
கற்பு விஷயத்தில் ஒருவருக்கு எதிராக மற்றவர் குற்றம் சுமத்துவதில் மிகவும் அஞ்ச வேண்டும் என்பதற்காகவும், பெண்களின் மானத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அற்புதமான சட்டத்தை இஸ்லாம் உலகுக்கு வழங்கியது. எந்த நாட்டிலும் இத்தகைய அற்புதமான சட்டம் இருபதாம் நூற்றாண்டில் கூட இல்லை. சர்வ சாதாரணமாக கிசுகிசுக்கள் பரப்படுகின்றன. இத்தகைய ஒரு சட்டம் உலகில் நடைமுறைப்படுத்தப்பட்டால் பல பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும்.
எனவே பாரதூரமான இந்த விஷயத்துக்கு நான்கு சாட்சிகள் அவசியம் என்பதை திருமணம் உள்ளிட்ட ஒப்பந்தங்களுக்குப் பொருத்திப் பார்க்கக் கூடாது.
(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)
திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode