குட்மார்னிங் சொல்வது குற்றமா?
குட் மார்னிங், குட் ஈவினிங் என்று சொல்வது குற்றமா? இது மற்றவரை வணங்கிய குற்றத்தில் சேருமா?
ஷாகுல் ஹமீது
பதில் :
இதில் வணங்குதல் போன்ற எந்த அர்த்தமும் இல்லை.
குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் (நல்ல மாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்நைட் (நல்ல இரவாக இருக்கட்டும்) ஆகிய வார்த்தைகள் பிரார்த்தனை வடிவத்தில் உள்ளன.
பிரார்த்தனை செய்யும் வகையில் அமைந்துள்ள இவ்வார்த்தைகளில் பிறரை வழிபடும் இணைவைப்பு இல்லை. எனவே இவ்வார்த்தைகளை ஒருவர் கூறினால் பிறரை வழிபட்டவராக ஆக மாட்டார்.
மேலை நாட்டவர்கள் இவ்வார்த்தைகளை உலகுக்குக் கற்றுக் கொடுத்தனர். இஸ்லாம் மனித குலத்துக்கு ஸலாம் கூறுவதைக் கற்றுக் கொடுத்துள்ளது. இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ள ஸலாத்துடன் இவ்வாழ்த்துக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஸலாம் கூறுவதே சிறந்த வாழ்த்தாகவும், எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் பொருந்தக்கூடிய வாழ்த்தாகவும் அமைந்திருப்பதை அறிய முடியும்.
குட்மார்னிங், (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங், (நல்ல மாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்நைட், (நல்ல இரவாக இருக்கட்டும்) ஆகிய வார்த்தைகளை துக்கம் நிறைந்த ஒருவனிடம் கூற இயலாது. சுனாமியில் குடும்பத்தை இழந்த ஒருவனுக்கு நல்ல காலைப் பொழுது உண்டாகட்டும் என்று கூற இயலாது.
அதுமட்டுமின்றி காலையில் சொன்ன வாழ்த்தை மாலையில் சொல்ல முடியாது. மாலையில் கூறிய வாழ்த்தை இரவில் கூற இயலாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ற வாழ்த்து இன்பத்தில் திளைத்தவனுக்கும் பொருந்தும். துன்பத்தில் உழல்பவனுக்கும் பொருந்தும். இதைக் கூறுவதால் யாருடைய சுயகௌரவத்திற்கும் எந்தப் பங்கமும் ஏற்படாது. நல்ல உறவு ஏற்படுவதற்கு ஒருபாலமாக ஸலாம் அமைந்திருக்கிறது.
எனவே இந்த வாழ்த்துக்களைத் தவிர்த்துவிட்டு ஸலாம் கூறுவதற்கு இயலுமானால் நாம் ஸலாம் கூறிக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் இந்த வாழ்த்துக்களைக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டால் இவற்றைக் கூறுவது இணைவைத்தல் என்ற குற்றத்தில் வராது. ஆனால் ஸலாம் எனும் அழகிய முறையினால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளை நாம் இழந்து விடுவோம்.
06.12.2010. 5:36 AM
குட்மார்னிங் சொல்வது குற்றமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode