Sidebar

25
Thu, Apr
0 New Articles

201. பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

201. பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்?

இவ்வசனத்தில் (9:29) முஸ்லிம் அல்லாதவரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்குமாறு கூறப்படுகிறது.

இது பிற மதத்தவர் மீது செய்யும் அக்கிரமம் போல் கருதப்படுகிறது. இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டால் ஜிஸ்யா வரியை யாரும் குறை கூற மாட்டார்கள்.

இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகின்றது?

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், விளைவிக்கப்படும் தானியங்கள் மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஜகாத் என்பது இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமியச் சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரமஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகளின் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும்போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருப்பது நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாக கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

1. முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

2. முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது.

3. முஸ்லிமல்லாதவர்கள் மீது வேறு விதமான வரிகள் விதிப்பது.

இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்தும் முஸ்லிம்கள் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.

வரி செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை முஸ்லிமல்லாதவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் எழும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவார்கள். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் வரி வாங்கப்படாதவர்களுக்கு அது அவமானமாகவும் ஆகும். வரி வாங்கப்படாமலிருப்பது சட்டப்படியான உரிமை அவர்களுக்கு இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கி விட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதவர்களும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்த வரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது, இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும். இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள், வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இதை அவர்களால் ஏற்க முடியாது.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் இஸ்லாமிய அரசு தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அது மதக் கடமையாக உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்குக் காட்டுவார்கள்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்புத் தர மாட்டார்கள். இயன்ற வரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.

வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.

இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

'ஜகாத்' என்ற வகையல்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே 'ஜிஸ்யா' எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விடப் பல மடங்கு அதிகமாக வரி செலுத்தினர்.

இஸ்லாமிய ஆட்சியில் வரி செலுத்துவதில் முஸ்லிம்கள் தான் அதிகம் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

இவ்வசனத்தில் 'இழிந்தவர்களாக' என்று கூறப்படுவது போருக்கு வந்து தோற்று இழிவடைவதைக் குறிப்பதாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account